அந்தக் காலத்தில் கோவில்கள்


கோயில் வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன் மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவைகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கின்றன. போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. காலத்தின் சாட்சியாய், கோடிக்கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள்.

ஓதுவார்களின் தேவாரப்பாடல்களும், நடன மங்கைகளின் நாட்டியங்களும், நாதஸ்வர, மேளதாளங்களின் சங்கம இசையும், படப்படக்கும் புறாக் கூட்டங்களும், காண காண திகட்டாத சிற்பக்கலைகளும், பண்டாரங்களின் ஞானப்பாடல்களும், எண்ணைய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றத்தையும், மனதை நிறைக்கும் மணி ஓசையையும், சந்தன விபூதி மணமும், வீதியில் அசைந்துபோகும் தேரும் , திருவிழாவும், மக்களோடு மக்களாய் ஒன்றி இருந்தன.

ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலம் உண்டு, நேந்து விடுபவர்களால் மாடுகளும், ஆடுகளும், கோல்களும் நிரம்பி வழிய அதை விவசாயிகளும், ஆடு மாடு மேய்ப்பவர்களும் பார்த்துக் கொண்டார்கள். அந்தக் கால வாழ்க்கை முறையில் ஒரு சிறந்த கணக்கியல் வல்லுனனாக கூட கோவில் இருந்துள்ளது.

மாடுகளை மேய்ப்பவனுக்கு அதற்கான நிலமும் கோவிலில் கொடுக்கப்பட்டது. அந்த மனிதன் கடவுளுக்கு நெய்வெய்தியம் செய்ய வேண்டிய பாலை மட்டும் கொடுத்துவிட்டு, மாட்டையும், நிலத்தையும் அனுபவிக்கலாம். அவன் சரியாக பாலை கொடுக்காத பட்சத்தில் அந்த நிலமும், மாடுகளும் பரிக்கப்படும். இது ஒரு எடுத்துக் காட்டு மட்டும் தான். இப்படி ஏகப்பட்ட நுட்பமான கோட்பாடுகள் உண்டு.

ஓதுவார்கள், பண்டாரங்கள், நாட்டிய கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள், இசை மேதைகள், புலவர்கள், சுத்தம் செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள், விவசாயிகள், பூ வியாபாரிகள் என கோடிகோடியான மக்களுக்கு வாழ்வாதமாக விளங்கியுள்ளன அந்தக்கால கோவில்கள். இங்கு வியாபாரிகளில் பூ வியாபாரிகள் என குறிப்பிட்டு சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் நம்முடைய பூஜை முறையே பூவை கடவுள் மீது போட்டு வணங்குவது தான்.

ஒட்டுமொத்தமாக சமூகம் முழுமைக்கும் பயன்பட்டுவந்த இந்தக் கோவில்களி்ன் இன்றைய நிலையைப் பற்றி அடுத்த இடுகையில் காண்போம்.

0 Comments:

Post a Comment



Blogger Template by Blogcrowds